தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தம்

நாடு தழுவிய ரீதியாக பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளன. இதற்கு பல அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

துறைமுகம், தொடருந்து, சில சுகாதார சேவை சங்கங்கள், சுங்கத்தினர், ஆசிரிய அதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்றைய போராட்டத்துக்கு தமது தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ளதாக ஆசிரிய அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்றைய போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தின் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் தெரிவித்தார்.

அத்துடன் இன்று முன்னெடுக்கப்படுகின்ற தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குகின்ற போதிலும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லையென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அதன் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடு முழுவதுமுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும், இன்றைய தினம் மரக்கறி விநியோகம் இடம்பெறமாட்டாது என அகில இலங்கை ஒன்றிணைந்த பொருளாதார மத்திய நிலைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்றைய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியுள்ளது.

இன்றைய போராட்டம் சிறந்த எச்சரிக்கையாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.

மேலும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் குடிவரவு குடியகல்வு, ஆட்பதிவு மற்றும் மோட்டார் போக்குவரத்து ஆகிய திணைக்களங்களின் பாதிப்பு ஏற்படக்கூடும் என இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என அதன் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக குறிப்பிட்டார்.

தங்களது தொழிற்சங்கத்தினர் இன்று முற்பகல் 9.30 அளவில் சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் செயலாளர் பிரதீப் லக்ஷாந்த தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE