இஸ்ரேல் அரசில் இருந்து கூட்டணி கட்சி உறுப்பினர் ஒருவர் ஆதரவை திரும்ப பெற்றதை அடுத்து பிரதமர் நப்டாலி பென்னட் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பிரதமர் நப்டாலி பென்னட் தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மொத்தம் 120 இடங்களை உடைய பார்லிமென்ட்டில் எட்டு கட்சிகள் ஆதரவுடன் நப்டாலி ஆட்சியை பிடித்துள்ளார். இவர் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு கூட இன்னும் முடிவடையவில்லை.
யூதர்கள் புனித நாட்களாக கருதும் ‘பாஸ் ஓவர்’ என்ற திருவிழா காலத்தில் அந்நாட்டில் புளிப்பு சுவை உள்ள உணவுகளை உண்ண தடை உள்ளது. மருத்துவமனைகளில் இவ்வகை உணவுகளை எடுத்து வர அனுமதித்து பிரதமர் பென்னட் தலைமையிலான அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கூட்டணி கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. ஐடிட் சில்மான் தன் ஆதரவை திரும்ப பெற்றுள்ளார். இதனால் பிரதமர் பென்னட் தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்துள்ளது.