அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம் என முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தை வவுனியாவில் இன்று (28) திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
பயங்கரவாத தடை சட்டத்தை இப்போது தொடர்ச்சியாக நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஆனாலும் நாங்கள் ஏற்கனவே எதிர்த்து குரல் எழுப்பியிருக்கின்றோம். அதற்கு எதிராக வாக்களித்து இருக்கின்றோம். அவ்வாறான சூழ்நிலைகள் இருந்தாலும் இப்பொழுது இயக்க ரீதியாக எங்கள் மத்தியில் இயக்கத்தை முன்னெடுத்திருக்கின்றோம்.
நாங்கள் இப்போது தீர்மானம் எடுத்திருப்பது எங்களுடைய நிலம் நாங்கள் எங்களை ஆழ வேண்டுமாக இருந்தால் எங்கள் மண்ணிலே நில உரிமை அடிப்படையாக இருக்க வேண்டும். அது இருக்கிறதா? ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பல முனைகளில் மகாவலி, தொல்பொருளியல் அடிப்படையில் பௌத்த மயமாக்குவது, சிங்கள மயமாக்குவது, சிங்களவர்களை குடியேற்றுவது , அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களுடைய நிலங்கள் பறிக்கப்படுவது அதனைவிட பறிக்கப்படுவதற்கு சமமாகவும், அதற்கு அப்பாலும் இராணுவங்கள் இலட்சக்கணக்காக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருப்பவர்கள். பல ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எங்களுடைய பிரதேசங்களில் கைப்பற்றப்பட்டு வந்திருக்கின்றது. இவற்றையெல்லாம் நாங்கள் மதிப்பீடு செய்யப்போகின்றோம்.
நிலத்தினுடைய விடுதலைக்காக விடிவிற்காக அதனை நாங்கள் உறுதிப்படுத்துவதற்காக எங்களுடைய சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்கு எங்கள் மண்ணை நாங்கள் ஆளுவதற்கு நிலம் எங்களுக்கு இருக்க வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். இன்று அரசினாலும் , இராணுவத்தினாலும் தொடர்ந்தும் பல காரணங்களை கூறி கைப்பற்றப்படுகின்ற நிலங்களில் சிங்களவர்களை குடியேற்றி எங்களை சிறுபான்மையானவர்களாக , சுயநல உரிமைக்கு தகுதியற்றவர்களாக நாங்கள் அரசியல் உரித்தை கோருவதற்கு எங்களை தகுதியற்றவர்களாக ஆக்குகின்ற மிக கொடிய போராட்டத்திலே மிக பெரிய திட்டத்தோடு இன்றைய அரசாங்கமும் ஒவ்வொரு நாளும் அந்த நிலைமைக்கு அவர்கள் ஈடுபட்டு வருவதுமல்ல அதற்கு நாங்கள் முகம்கொடுத்து பலவிதமான நெருக்கடிகளை நாங்கள் ஜனநாயக ரீதியில் நிலத்தை பாதுகாக்க போராட வேண்டி இருக்கின்றோம்.
எமது மக்களை பாதுகாக்கலாம் என்பதற்காக ஒரு சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்ற இலங்கை, சர்வதேச சூழ்நிலையில் நிலம் ரீதியாக முழுமையான விபரங்களையும் , வரைபடங்களையும் மக்கள் இழந்திருக்கிறார்கள் , மக்கள் தங்களுடைய நிலத்தை எவ்வளவு இழந்திருக்கிறார்கள் அந்த நிலங்களை பாதுகாக்கவும், பறிக்கப்பட்ட , அபகரிக்கப்பட்ட , இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை நாங்கள் மீட்டெடுப்பதற்காகவும் விரைவில் தமிழரசுக்கட்சியின் மாநாடு நடத்தப்பட இருக்கின்றது.
அடுத்த வாரத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் கூகுள் மெப் அடிப்படையில் எவ்வளவு நில வரைபடங்களை கொண்டுள்ளது. அதற்கு பின்னர் எவ்வளவு நிலங்களை நாங்கள் இழந்திருக்கின்றோம். இராணுவம் எவ்வளவு நிலங்களை கைப்பற்றியிருக்கின்றது, அவ் நிலங்களில் தாங்கள் குடியுரிமை கொண்டுள்ளவர்களாக , உரித்துடையவர்களாக , அங்கே பண்ணைகளை வைத்திருப்பதும், விவசாயத்தை செய்வதும் , தொழில்பேட்டைகளை அமைப்பதும் இவ்வாறு வடக்கு கிழக்கு முழுவதும் சிங்களவர்களை குடியேற்றுவது மட்டுமல்ல இராணுவமே குடியேற்றப்பட்டவர்களாக எங்களுடைய நிலங்களை கைப்பற்றி பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தங்களுடைய கையிலே வைத்திருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் சர்வதேசத்திற்கு முன்னால் முன்வைப்பது மட்டுமல்ல ஜனநாயக ரீதியாக இந்த நாட்டுக்குள்ளும், வெளியிலும் புலம்பெயர்ந்தவர்களும் நிலத்தை மீட்பதற்காக போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மாநாட்டிலே உரிய தீர்மானத்தை எடுக்க இருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.