இலங்கை காவல்துறையினருக்கு பிரித்தானிய அரசாங்கம் மீண்டும் பயிற்சிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பிரித்தானியாவின் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தின் கடிதம் ஒன்றை மேற்கோள்காட்டி த சண்டே போஸ்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாகவும், அதனால் அவர்களுக்கான பயிற்சிகளை பிரித்தானியா நிறுத்த வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இதன்படி ஸ்கொட்லாந்து காவல்துறையினர் இலங்கைக் காவல்துறைக்கான பயிற்சியளிப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்தினர்.
எனினும் இந்த நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தப்படவில்லை என்றும், தற்போதைய நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அடுத்த கட்ட தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது ஏமாற்றமளிக்கும் வகையில் இருப்பதாக ஸ்கொட்லாந்தின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும், அரசியல்வாதிகளும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் காவல்துறையினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்து, ஏதிலிகளாக சென்று பிரித்தானியாவில் தஞ்சம் பெற்றுள்ளவர்களை அழைத்து சாட்சி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை ஒழுங்கு செய்யப் பிரித்தானிய அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.