ஏமன் நாட்டு சிறை மீது சவுதி அரேபியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஏமன் நாட்டில் 2015ல் ஹவுதி பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தி, அதிபர் ஹாதியை விரட்டியடித்து தலைநகர் சனாவை கைப்பற்றினர்.அப்போதிலிருந்து ஏமனில் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நிகழ்ந்து வருகிறது. ராணுவத்திற்கு ஆதரவாக சவுதி அரேபியா வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.இந்நிலையில் நேற்று சவுதி அரேபியா போர் விமானங்கள் ஏமன் நாட்டின் சாடா மற்றும் ஹேடெய்டா நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தின.
சாடா நகரில் சிறை மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதிகளின் தொலைக்காட்சி நிறுவனம் வீடியோ வெளியிட்டது. அதில், சிறைக் கட்டடம் இடிந்து விழுந்ததால் எழுந்த புகை மண்டலத்தில் ஆங்காங்கே இறந்து கிடந்த உடல்கள் காணப்பட்டன.
சவுதி அரேபியா போர் விமானங்கள் ஹொடெய்டா நகரில் ‘டெலியேமன்’ என்ற தொலைதொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தின.இதில் அந்த கட்டடத்தின் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர். அத்துடன் தொலை தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டது.