தென் கொரிய பாராளுமன்ற தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங் சியொக் (Park Byeong-seug) தலைமையிலான தூதுக்குழுவினர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்திப்பதற்காக இன்று (21) பாராளுமன்றத்துக்கு வருகை தந்தனர்.
இதன்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தென் கொரிய பாராளுமன்ற தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங் சியொக் வரவேற்று சபையில் விசேட அறிவிப்பொன்றை விடுத்தார்.
தூதுக்குழுவினர் மத்தியில் உரையாற்றிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்திற்கும் பிரஜைகளுக்கு இடையில் விரிவடைந்துவரும் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கு பிரஜைகளின் பங்கேற்பையும் பாராளுமன்ற முறைமையில் ஈடுபாட்டையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் திறந்த பாராளுமன்ற கொள்கையொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், புதிதாக தொடர்பாடல் திணைக்களத்தை நிறுவியும், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழு மற்றும் அரசாங்கக் கணக்குகள் குழு என்பவற்றை ஊடகங்களுக்கு அனுமதித்தும் பாராளுமன்ற செயற்பாட்டின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனூடாக பயனுள்ள வகையில் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
பன்மொழித் தேடலைச் செயல்படுத்தும் திட்டத்தையும், பாராளுமன்றத்தின் மின் நூலகம் ஊடான ஆவணக் காப்பக அமைப்புக்கான தளத்தையும் ஏற்படுத்தி டிஜிட்டல் மயமாக்கலை ஆரம்பித்துள்ளதாகவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.
‘காகிதமற்ற பாராளுமன்றம்’ என்ற திட்டத்தின் நோக்கத்தையும் சபாநாயகர் இதன்போது வெளிப்படுத்தினார்.
பாராளுமன்ற இணையத்தளத்தை மேம்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அது நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
பிரஜைகளின் பங்கேற்பையும் ஈடுபாட்டையும் மேம்படுத்தும் இலங்கை பாராளுமன்றத்தின் முயற்சியை பாராட்டிய தென் கொரிய பாராளுமன்ற தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங் சியொக், தாங்களும் அதனை அடைவதில் முனைப்பாக இருப்பதாக தெரிவித்தார்.
இதேவேளை, தென் கொரிய பாராளுமன்ற தேசிய சபையின் சபாநாயகர் பார்க் பியோங் சியொக் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை தென் கொரியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.