உக்ரைன் மீது போர் தொடுக்கும் நடவடிக்கையை ரஷ்யா கைவிட வேண்டும்; இல்லையெனில் ரஷ்யா பேரழிவை சந்திக்கும்,” என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை உள்ளது.உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை 2014-ல் ரஷ்யா கைப்பற்றியது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய, உக்ரைன் விரும்புகிறது. இதற்கு அமெரிக்கா ஆதரவுஅளிக்கிறது; ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இதையடுத்து நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வருகிறது. ‘உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப் படும்’ என, அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்துள்ளது.இந்நிலையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று நேற்றுடன்ஓராண்டு நிறைவு பெற்றது.
இதையொட்டி வாஷிங்டனில், பைடன் கூறியதாவது:உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால், அது ரஷ்யாவுக்கு பேரழிவாக அமையும். கடும் பொருளாதார நெருக்கடியை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
உக்ரைனுக்கு அமெரிக்கா ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளது. 150 கோடி ரூபாய் மதிப்பில் ராணுவ உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால், உக்ரைனுக்கான ராணுவ உதவியை அமெரிக்கா நிச்சயம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.