அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை தோல்வி உக்ரைன் விவகாரம் உக்கிரமாகிறது

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யா, அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் கடந்த வாரம் நடந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதனால் பேரழிவு தரக்கூடிய மோதலை தவிர்ப்பதில் இன்னும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பழைய சோவியத் ஒன்றியத்தில் ரஷ்யாவும், உக்ரைனும் ஒன்றிணைந்த பகுதிகளாக இருந்ததன.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் இவை தனித்தனி நாடுகளாக பிரிந்தாலும், உக்ரைனில் அதிகளவில் ரஷ்ய மொழி பேசும் மக்களே வசிக்கின்றனர். ஆனாலும், உக்ரைன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டு சேர்வதிலேயே ஆர்வமாக இருந்து வருகிறது. ரஷ்யாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் உக்ரைன் அமைந்துள்ளது.

இதனால், ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் உக்ரைன் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றன. உக்ரைனில் கால்பதிப்பதன் மூலம் ரஷ்யாவை நெருங்க முடியும், அதன் மூலம் ரஷ்யாவுக்கு அழுத்தம் தர முடியும் என நினைக்கின்றன. இதனாலேயே பல பொருளாதார சலுகைகளைக் காட்டி, அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகள் கொண்ட நேட்டோ அமைப்பில் சேர உக்ரைனை தூண்டுகின்றன.

இந்த அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அமெரிக்க, ஐரோப்பிய படைகள் உக்ரைனில் பாதுகாப்பு என்ற பெயரில் குவிக்கப்படும். இது தனது நாட்டிற்கு நேரடி ஆபத்தாக அமையும் என ரஷ்யா கருதுகிறது. இதனால், எக்காரணம் கொண்டும் உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேருவதை ரஷ்யா விரும்பவில்லை. அதே சமயம், உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே ரஷ்ய அதிபர் புடின் விரும்புகிறார்.

சமீபகாலமாக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேரும் தனது விருப்பத்தில் உக்ரைன் தீவிரம் காட்டுவதால், அதை மிரட்டும் வகையில் அதன் எல்லையை ஒட்டி ரஷ்யா ஒரு லட்சம் வீரர்களை குவித்துள்ளது. பல நவீன ஆயுதங்களையும் நிலைநிறுத்தி உள்ளது. நேட்டோவுடன் இணைய உக்ரைன் நடவடிக்கை எடுத்தால், ராணுவ நடவடிக்கைகள் மூலமாக அந்நாட்டை கைப்பற்ற தயார் நிலையில் ரஷ்ய படை உள்ளது.

இதற்கு அமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனை தாக்கினால், அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்துள்ளார்.இதனால், உக்ரைன் விவகாரம் சர்வதேச பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இப்பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க ரஷ்யா, அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய ஒன்றிய கூட்டு நாடுகள் முடிவுகள் செய்துள்ளன.

இது தொடர்பாக கடந்த வாரம் புடினும், பைடனும் காணொலி மூலமாக நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர். இது தோல்வியில் முடிந்துள்ளது. உக்ரைன் பிரச்னையில் இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், உக்ரைன் விவகாரத்தில் முடிவு ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதால், இந்த விவகாரம் உக்கிரமாகி வருகிறது. இதற்கு ராணுவ ரீதியாக தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது உலகின் மிகப்பெரிய பேரழிவுக்கு வழி வகுக்கும் அபாயம் உள்ளது.

யார் பின்வாங்குவது?உக்ரைன் விவகாரத்தை பொறுத்த வரை யார் விட்டுக் கொடுப்பது என்பதுதான் ரஷ்யா, அமெரிக்கா இடையே நிலவும் மானப்பிரச்னையாக இருக்கிறது. இந்த விஷயத்தில் வெளி உலகுக்கு முன் விட்டுக் கொடுத்து போவதை இருவருமே விரும்பவில்லை. புடின் பின்வாங்காமல் இந்த பிரச்னை தீராது என ஐரோப்பிய ஒன்றியம் தரப்பில் கூறுகின்றனர்.

இந்த விஷயத்தில் அமெரிக்காதான் குழப்பத்தை ஏற்படுத்துவதாக ரஷ்யா குற்றம்சாட்டுகிறது. முடிவு எடுக்கும் அதிகாரத்தை வைத்துள்ள அமெரிக்கா, நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென சாக்குபோக்கு சொல்லி காலம் தாழ்த்துவதாக ரஷ்யா கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE