அடுத்த மூன்று வருடங்களுக்குள் உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு குழுவாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டவாறு மேலும் ஒரு திட்டத்தை யதார்த்தமாக்கும் வகையில், ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மொனராகலை – சியம்பலாண்டுவ மஹா வித்தியாலயம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்று (07) தேசிய பாடசாலையாக மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஏற்படும் பின்னடைவுகளை, ஒரு குழுவாக எதிர்கொள்வது கூட்டுப் பொறுப்பாகும். அவ்வாறு செய்யாமல், குறைகளை மட்டும் விமர்சிப்பது சம்பந்தப்பட்டவரின் திறமையின்மையே ஆகுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இழந்த இரண்டு வருடங்களைப் பற்றி சிந்திக்காமல், உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை அடுத்த மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக, ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறார்கள். எவ்வாறாயினும், அரசியலமைப்பின் மூலம் வழங்கக்கூடிய 30 அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்கி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு உதவுவது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடமை எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தீர்மானங்களை எடுக்கும்போது அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை மட்டும் பாருங்கள் என்றும் அவ்வாறில்லாமல் சுற்றறிக்கைகளின் மூலம் எவ்வாறு வேலைசெய்யாதிருப்பதெனப் பார்க்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு முழு ஆதரவை வழங்குமாறு, அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE