ஆரோக்கிய உணவு (Healthy food)

உயிர் வாழ உணவு தேவை என்பது சாதாரண வாக்கியம். வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல் வேண்டும் என்றால், நமக்கு நிச்சயம் தேவை “ஆரோக்கிய உணவு”.

ஆரோக்கிய உணவு என்றால் பெரும்பான்மையானவர்களுக்கு நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா வற்புறுத்திக் கொடுத்து வேண்டாவெறுப்பாய் சாப்பிடும் பெயர் தெரியாத கீரைகள் போன்ற ஒரு சில உணவு பதார்த்தங்கள்தான். கட்டாயப்படுத்தலின் பேரில் உண்ணப்படும் ருசியற்ற உணவுகள்தான் ஆரோக்கிய உணவா? என்றால் நிச்சயம் இல்லை. பின் எவைதான் ஆரோக்கிய உணவு?

நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச் சத்துக்கள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற, நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே, அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும். ஆரோக்கிய உணவின் அடிப்படை அம்சங்கள் இந்த மூன்றுதான்,

Healthy food

  1. நம் உடல்நிலைக்கு ஏற்றது
  2. தேவையான சத்துக்கள் நிறைந்தது
  3. அளவோடு உண்பது

என்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற உணவு எது என்று யாரேனும் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிப்பது மிகவும் சிரமம். ஒவ்வொருவர் உடல்நிலையும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பொதுவில் எல்லா தரப்பினருக்கும் பரிந்துரைக்கலாம். ஆனால் குறிப்பாக இவைதான் உங்களுக்கு பொருத்தமான உணவு என்று சொல்லவேண்டும் என்றால் தங்களுடைய உடல்நிலை குறித்த முழுமையான விபரங்கள் தேவைப்படும். ஆகையால் ஒவ்வொருவரும் தங்களது உடல் குறித்த உண்மையான நிலையினை மருத்துவரின் உதவியோடு அறிந்து வைத்து இருத்தல் மிகவும் அவசியம்.

உங்களது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ளவும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை தங்களது உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமானதுதானா என்பதனை தெரிந்து கொள்ளவும். இதற்கு உடல் பருமன் சுட்டினை (Body Mass Index) பயன்படுத்துங்கள்.

உங்களது உடல்நிலை ஆரோக்கியமாக சாதாரண நிலையில் உள்ளதா என்பதனை மருத்துவரின் உதவியோடு அறிந்துகொள்ளவும். வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்பு முதலிய விபரங்களையும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். நோய்கள் ஏதேனும் இருப்பின், நோயின் தீவிரம், என்ன வகை, அதனால் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பது போன்ற கேள்விகளுக்கும் பதில் அறிந்துகொள்ளவும்.

உங்களது உடல் குறித்த விபரங்கள் தெரிந்து கொண்டபின் உணவு மற்றும் உணவுபொருட்கள் குறித்த சில அடிப்படை விசயங்களைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE