சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் மட்டுமின்றி, வளர்ப்புப் பிராணிகளையும் வெளியே அழைத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் பரவத் துவங்கிய கொரோனா தொற்று, தடுப்பூசி பரவலாக செலுத்தப்பட்ட பின் உலக அளவில் கட்டுக்குள் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் உலக அளவில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால், நம் அண்டை நாடான சீனாவின் ஷாங்காய் நகரில் சமீப நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஷாங்காய் நகரில் நேற்று ஒரு நாள் மட்டும் 4,477 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அந்த வளாகத்திற்குள் நடைபயிற்சி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வளர்ப்புப் பிராணிகளையும் வீட்டை விட்டு வெளியே அழைத்து வரக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்நகரில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்டோர் மட்டுமே அத்தியாவசியப் பணிகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.