அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்கள் துறை தலைவரான மருத்துவர் பாஹீம் யூனுஸ் தனக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அந்த அனுபவத்திலிருந்து அவர் கற்றுக்கொண்ட 5 பாடங்களை பகிர்ந்துள்ளார்.
இது பற்றி அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: 2 ஆண்டுகளில் 1000 தடவைகளுக்கு மேல் கோவிட் நோயாளிகளைச் சுற்றி வந்திருக்கிறேன். முகக்கவசங்கள் மற்றும் கவச உடைகளினால் நோய்த்தொற்று ஏற்படவில்லை. ஆனால் தற்போது முகக்கவசமின்றி குடும்ப நிகழ்வில் பங்கேற்ற போது கோவிட் என்னை பிடித்தது. எனவே உங்களால் முடிந்தால் என்95 அல்லது கே.என்.95 முகக்கவசங்களை அணியுங்கள்.
நோய் தொற்று ஏற்பட்டு வென்டிலேட்டரில் உயிருக்கு போராடாமல், 5 நாட்களுக்குப் பின் முகக்கவசங்களுடன் நான் வேலைக்கு திரும்பிவிட்டேன். எனது கதையை சமூக ஊடகங்களில் சொல்கிறேன். இதிலேயே நீங்கள் அறிந்துகொள்ளலாம் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் அதன் வேலையைச் செய்துள்ளன என்று. எனவே தடுப்பூசிக்கும், கடவுளுக்கும் நன்றி கூறுகிறேன்.
எனக்கு மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள், ஸ்டெராய்டுகள் பாக்ஸ்லோவிட் போன்றவை தேவைப்படவில்லை. அறிகுறிக்கு தகுந்த சிகிச்சை போதுமானது. ஐவர்மெக்டின், ஹைட்ரோகுளோரோகுயின், ஜிங்க் போன்றவற்றையும் நிச்சயமாக நான் பயன்படுத்தவில்லை. அதே சமயம் கடுமையான நோயாளிகளுக்கான நெறிமுறைகள் வேறுபட்டவையாக இருக்கும்.
கோவிட் இருக்கிறதோ இல்லையோ, உங்கள் மரணத்தை பற்றி அடிக்கடி நினைத்துப் பாருங்கள். இது எல்லாவற்றையும் சரியான வகையில் காண வைக்கும். தைரியமான, அர்த்தமுள்ள முடிவுகளை எடுப்போம். மந்தை நோய் எதிர்ப்பு சக்தி நல்லது, மந்தை மனநிலை மோசமானது.
பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளுங்கள், என்95 முகக்கவசங்களை அணியுங்கள், அப்படியும் கோவிட் தொற்று ஏற்பட்டாலும், கவலை வேண்டாம் முழுமையாக குணமடைவீர்கள். நான் பங்கேற்ற குடும்ப நிகழ்ச்சி எனக்கு முக்கியமானது. அதனால் அந்த ரிஸ்க்கை எடுத்தேன். ஆனால் உங்கள் ரிஸ்க் அளவு வேறுபட்டதாக இருக்கலாம். அறிவியலை முதலில் மதியுங்கள். பின்னர் மனது சொல்வதை செய்யுங்கள். இவ்வாறு தான் கற்ற அனுபவங்களை ஐந்து பாடங்களாக வழங்கியுள்ளார்.