கோவை கே.ஜி. திரையரங்கில் விக்ரம் திரைப்படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திரையரங்க ஊழியர்களை நினைவு பரிசுகளை கமல்ஹாசன் வழங்கினார்.
இதையடுத்து பேசிய நடிகர் கமல்ஹாசன், ”சினிமாவில் நடிக்க ஆரம்பத்தில் என்னை நீ தான் அந்த பிள்ளை என கேட்டபோது மகிழ்ச்சி அளித்தது. ஆனால் ஆரம்ப காலத்தில் நான்கு படங்கள் நடித்தும் என்னை யாரும் கண்டுக்கவில்லை. அதை மாற்றவும் உழைத்தேன். சினிமாவில் சாதித்தது எனக்காக மட்டும் என பெருமை பீத்திக்கொள்ள முடியாது. ஒடிடி காலகட்டத்தில் பழைய திரையரங்குகளை மல்டி ப்ளேக்ஸ் தியேட்டர்களாக மாற்றி இளைஞர்கள் முன் வந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒடிடி குறித்து முன்கூட்டியே சொல்லியிருந்தேன்.
திரையரங்குளில் உணவகம் வரப்போகிறது. அமெரிக்காவில் வந்துவிட்டது. உணவகமும் தொழில் தான் சினிமாவின் மவுஸ் இன்னும் குறையவில்லை. வாந்தாரை வாழ வைக்கும் தமிழகம் போன்று சினிமாவும் தான். 63 ஆண்டு காலமாக என்னை வாழ வைத்துள்ளது. நல்ல திரைப்படங்களை ரசிகர்கள் கைவிடக்கூடாது. ஒரு வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது சிறந்த திரைப்படங்கள் எடுக்க உத்வேகமாக அமையும்.
நல்ல நடிகர்களை வாழ்த்துங்கள். மக்கள் வாழ்த்தினால் சம்பளம் இரண்டு மடங்கு ஆகும். என்னை மட்டுமல்ல. நன்றாக நடிக்கும் நடிகரை வாழ்த்துங்கள். எங்கள் சினிமா இன்னும் சிறப்பாக இருக்கும். வட இந்தியாவில் பயப்படுகிறார்கள், தென் சினிமா பக்கம் அனைவரின் பார்வை திரும்பிவிட்டது. என் குடும்பமும் சினிமாவில் தான் இருக்கிறது. புதிதாக வரக்கூடிய நடிகர்களை உற்று கவனித்து வருகிறேன். என்னிடம் இல்லாததை புதிய நடிகர்களிடம் இருந்து எடுத்துக் கொள்கிறேன்.
எனக்கு பிடித்த ஊர் கோவை. கோவையில் விக்ரம் கிளைமேக்ஸ் படம் எடுக்கும் போது எனக்கு கோவிட் வந்து விட்டது. ராஜ்கமல் நிறுவனம் 53 வது படத்தை தயாரித்து வருகிறது. குறைந்த காலக்கட்டத்தில் 100 வது திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் நினைக்கிறேன். அது பேராசை கிடையாது. பேன், ஏசி வந்தவுடனும், ஏரி கரையில் நடக்குறோம்ல்ல, அந்த மாதிரி தான் சினிமா. சீனாவில் 50 ஆயிரம் சினிமா தியேட்டர்கள் உள்ளது. அதைவிட கூட்டம் இங்கு இருக்கு சினிமா வளர அதை நாம் இங்கு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.