உலகம் முழுக்கவே பேட்மேன் படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. டார்க் நைட், டார்க் நைட் ரிட்டன்ஸ் படங்களுக்கு பிறகு அதன் அடுத்த பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடிக்கிறார், மேட் ரிவ்ஸ் இயக்குகிறார். இப்படம் வரும் மார்ச் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் படத்தின் முக்கியமான காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆனது. பேட்மேன் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டிருப்பார் அப்போது அந்த சடங்கு நடக்கும் ஹாலுக்குள் ஒரு கார் பாய்ந்து வருகிறது. பலர் காயம் அடைகிறார்கள். அந்த காருக்குள் இருப்பவனை போலீஸ் சுற்றி வளைக்கிறது. அந்த காருக்குள் இருந்து ஒரு முதியவர் இறங்குகிறார். அவர் உடல் முழுக்க வெடிகுண்டு பொருத்தப்பட்டுள்ளது. ஒரு செல்போன் அவர் கையில் கட்டப்பட்டுள்ளது. வில்லன் அந்த போனுக்கு போன் பண்ணினால் அந்த மனித குண்டு வெடித்து சிதறும். அந்த முதியவரின் பனியனில் ‘டு தி பேட்மேன்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
இந்த 3 நிமிட காட்சிதான் லீக் ஆனது. இது ஹாலிவுட் சினிமாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சி இணையத்தில் வைரலாக பரவியது. ஆனால் வீடியோ குவாலிட்டி குறைவாக இருந்தது. இதை கவனித்த படத்தின் இயக்குனர் மேட் ரீவ்ஸ் லீக்கான அந்த 3 நிமிட காட்சியை ஹெச்டி தரத்தில் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டு அதனையே படத்துக்கான புரமோசனாக மாற்றி விட்டார்.