நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர், சென்னை உட்பட பல மாவட்டங்களில் சுயேச்சையாக களமிறங்குகின்றனர்.

தமிழகத்தில் கடந்த முறை நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், நடிகர் விஜயின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமல், அவரது ரசிகர்கள் போட்டியிட்டனர். தற்போது நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெயர், மன்றக் கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த, விஜய் தரப்பில் இருந்து, ரசிகர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமான விஜய் ரசிகர்கள், உடனடியாக மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து, ஆட்டோ சின்னம் ஒதுக்க கோரினர். ஆனால், விதிமுறைகளை சுட்டிக்காட்டிய, ஆட்டோ சின்னம் தர அதிகாரிகள் மறுத்தனர்.

தற்போது, தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. பிரதான கட்சிகள் கூட்டணி பேரம், வேட்பாளர் அறிவிப்பு என களத்தில் இறங்கி உள்ளனர். அவர்களுக்கு போட்டியாக விஜய் ரசிகர்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுயேச்சையாக களமிறங்குகின்றனர். ‘அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை விஜய் அறிவிப்பார்’ என விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலர் ஆனந்த் தெரிவித்திருந்தார்.

இன்னும் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகாத நிலையில், சென்னையில், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதியில், விஜய் ரசிகர்கள் பிரசாரத்தை துவக்கி விட்டனர். ஏற்கனவே நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், விஜய் ரசிகர்கள் 129 இடங்களில் வெற்றி பெற்றனர். இம்முறை வெற்றி பட்டியல் பல மடங்கு அதிகமாகும் என, விஜய் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE