ஆழ்கடலுக்கு தொழிலுக்குச் சென்ற 4 பேரை காணவில்லை

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 25ம் திகதி ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்ற தகப்பன் மற்றும் மகன் உட்பட நான்கு மீனவர்களும் இன்று வரை கரைக்கு திரும்பவில்லை என்று கடலுக்குச் சென்ற மீனவர்களின் உறவினர்கள் இன்று (13) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்குறித்த மீனவர்கள் காணாமற் போன விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு மீனவ சங்கத்தினர், காணாமல் போனவர்களின் உறவினர்களும் கொண்டு வந்திருந்த போதிலும், தேடுதல் நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருவதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

13 தினங்களாக கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்று வரை கரைக்குத் திரும்பவில்லை என்பதுடன், அம் மீனவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரமின்றி தமது வாழ்க்கையைக் கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

வாழைச்சேனை மீன்பிடி துறையிலிருந்து ஆழ்கடல் இயந்திரப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தகப்பன் மகன் உட்பட நான்கு மீனவர்கள் 13 நாட்களாகியும் இதுவரை கரை திரும்பவில்லை என்பதுடன், குறித்த படகு சென்ற நிலையில் எவ்விதத் தொடர்புகளுமின்றி தாங்கள் உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

இதில் வாழைச்சேனையை சேர்ந்த கே.யூ. அஸ்ஸனலி, அவரது மகன் ஏ.எம்.முஹாஜித் மற்றும் எம்.எச்.எம்.றிஸ்வி, பி.எம்.இர்ஷாத் ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்து காணாமற் போயுள்ளனர்.

இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ், கடற்படை உள்ளிட்ட தரப்பினருக்கு மீனவ சங்கம் மற்றும் காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE