பீஹாரில் ஒரு பல்கலையில், பி.ஏ., தேர்வு எழுதுவதற்காக வழங்கப்பட்ட அனுமதி சீட்டில், பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் பிகு சவுகான், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் புகைப்படங்கள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு அமைந்துள்ளது. தர்பங்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், பி.ஏ., தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, மாநில கவர்னர் பிகு சவுகான், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் படங்களுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பல்கலை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது: தேர்வு எழுதும் மாணவர்கள் ‘ஆன்லைன்’ வாயிலாக விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. தங்களுடைய சுய விபரங்களுடன், புகைப்படத்தையும் மாணவர்களே அதில் இணைக்கும்படி கூறப்பட்டிருந்தது. சில விஷமக்கார மாணவர்கள், பிரதமர் உள்ளிட்டோரின் புகைப்படத்தை இணைத்துள்ளனர். இது தொடர்பாக அந்த மாணவர்களிடம் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.