கார்கிவ் நகர் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த பிப்ரவரி முதல் போர் தொடுத்து வருகிறது.
தற்போது வரை இந்த போர் நீிடித்து வருகிறது. இந்த தொடர் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். இரு தரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது.
இந்த போரில் உக்ரைன் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உக்ரைனில் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் மிக பெரும் இழப்பை சந்தித்திருக்கிறது. ரஷ்ய பொருளாதாரமும் முடங்கி இருக்கிறது.
உக்ரைன் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் ரஷ்ய ராணுவம், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகிறது. இதற்கிடையே, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனிய பகுதிகளில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. அங்குள்ள கார்கிவ் நகரில் கடந்த 15ம் தேதி நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், நேற்று மீண்டும் கார்கிவ் நகரின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய படைகளின் தாக்குதல்களுக்கு உக்ரைனிய படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றன.