ரசியா – உக்ரைன் போர் பற்றிய தகவல் மழலையர் கூடங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தகுந்த முறையில் கொடுக்கப்படல் வேண்டும்.
நோர்வேயில் உள்ள நகராட்சிகள் உக்ரைனில் நடக்கும் போரைப் பற்றி நமது சிறுவர்களுடன் எவ்வாறு பேசுவது என்பது பற்றிய தகவல்களை ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு வழங்கி வருகிறது.
போர் மற்றும் மோதல் போன்ற கடினமான விடயங்கள் பற்றி குழந்தைகளுடன் பேசுவது மிகவும் சவாலானது. மழலையர் கூடங்கள் மற்றும் பாடசாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது குறித்த விபரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. கல்வி திணைக்களம், Redd barna போன்றன இதற்காய் செயற்பட்டு வருகின்றன.
உக்ரைனின் நிலைமை மற்றும் அங்கு நடக்கும் போர் நடவடிக்கைகள் பல சிறுவர்களை கவலையடையச் செய்கின்றன. மழலையர் கூடங்கள், பாடசாலை மாணவர்களுடன் பேசுவதற்கும், கேட்பதற்கும், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்குமான ஒரு முக்கியமான பணி ஆசிரியர்களிடம் உள்ளது.
எனவே குளிர்கால விடுமுறையிலிருந்து திரும்பும் சிறுவர்களிடம், அவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பற்றி குழந்தைகளுடன் பேசுவது ஒரு முக்கியமான பணி ஆகும். உக்ரைனில் என்ன நடக்கிறது? என்பதைப் பற்றி வயதுக்கு ஏற்ற உரையாடல்களைத் தயார்படுத்துமாறு பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
நோர்வே ஒரு பன்முக கலாச்சார நாடாகும். அங்கு ரஷ்ய மற்றும் உக்ரேனிய பின்னணியைக் கொண்ட சிறுவர்களும் பாடசாலைகள் மற்றும் மழலை கூடங்களுக்கு செல்கிறார்கள். இந்த குழந்தைகளும், அகதிகளாக்கப்பட்ட அல்லது போரை அனுபவித்த குழந்தைகளும் கவனிக்கப்பட வேண்டும்.
பெரியவர்கள் வீட்டிலும், பாடசாலைகளிலும், மழலையர் கூடங்களிலும், போரைப் பற்றி நாம் எப்படிப் பேச வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். ரஷ்ய நாட்டை சேர்ந்த குழந்தைகள் ஒதுக்கி வைக்கப்படும் ஒரு சூழ்நிலை எளிதில் ஏற்படலாம். இதை நாம் தவிர்க்க வேண்டும், மேலும் நோர்வேயில் வாழும் ரஷ்யர்களுக்கு கூட போர் கடினம் என்பதை பெரியவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ரஷ்ய மாணவர்கள் மற்றும் குழந்தைகளை சொற்களால் வதைத்தல் மற்றும் தூண்டுதல்களைத் தவிர்க்க நமது சிறுவர்களுடன் பேசுங்கள் எனவும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.