இலங்கையில் எரிபொருள் இன்மையால், மின்னுற்பத்தி நிலையங்கள் தொடர்ந்தும் செயலிழந்த நிலையில் உள்ளன.
கொழும்பு துறைமுக பத்தல மின்முனையம் உலை எண்ணெய் இன்மையால், இன்று மதியத்துடன் செயலிழப்பதாக மின்சார சபை பேச்சாளர் அண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தற்போது 165 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் மையம் மற்றும் 115 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் என்பன எரிபொருள் இன்மையால் செயலிழந்துள்ளன.
அத்துடன், மத்துகம மின்னுற்பத்தி நிலையம், துல்கிரிய மின்னுற்பத்தி நிலையம் மற்றும் கெரவலப்பிட்டி மேற்கு முனைய மின்னுற்பத்தி நிலையம் என்பனவும் எரிபொருள் இன்மையால் செயலிழந்துள்ளன.
இன்று மதியம் பத்தல மின்னுற்பத்தி நிலையமும் செயலிழக்கின்றமையால், மின்சார விநியோகத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதாக சில அதிகாரிகள் அறிவிப்புக்களை வெளியிட்டுள்ள போதிலும், இதுவரையில் அவசியமான எரிபொருள் கிடைக்கப்பெறவில்லை என அந்த சபையின் பேச்சாளர் அண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.