ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை தொடர்பாக லண்டனில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக British Metropolitan Police வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் லண்டன் மென்ரோபொலிடன் பொலிஸ் இணைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
லண்டனில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நபர் ஈ.பி.டி.பி இயக்கத்தை சேர்ந்த நெப்போலியன் என தெரியவருகிறது.
ஈ.பி.டி.பி இயக்க நெப்போலியன் என்ற நபர் நிமலராஜன் படுகொலை வழக்கில் இலங்கையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். நெப்போலியன் என்பவர் 2001ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கு தீவகப்பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சென்ற போது இருவரை கொலை செய்தார் என்றும் சிலரை காயப்படுத்தினார் என்றும் தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்ட போதிலும் அந்நபர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காது லண்டனிற்கு தப்பி சென்று அங்கு வாழ்ந்து வந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் மாவை சேனாதிராசா சிவாஜிலிங்கம் உட்பட பலர் படுகாயம் அடைந்திருந்தனர்.
நிமலராஜனை படுகொலை செய்த நபர் லண்டனில் இருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து இந்நபரை லண்டன் பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.
லண்டன் பொலிஸ் போர் குற்ற விசாரணை பிரிவு பொலிஸாரே இந்நபரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினர்.