கனடாவில் அவசர நிலை பிரகடனத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

கனடாவில் லாரி ஓட்டுனர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக தீவிரமடைந்து வரும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.

போராட்டக்காரர்களை ஒடுக்க மாகாணங்களுக்கும், காவல்துறைக்கும் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவசர நிலையை பிரகடனப்படுத்தி இருந்தாலும் அதற்கு ஒருவாரத்தில் கனடா நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையில், இந்த விவகாரம் நேற்று கனடா நாடாளுமன்றத்தில் அனலை கிளப்பியது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதமர் ட்ரூடோ, கனடா குடிமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே அவசர நிலை உத்தரவு முடிவினை எட்டியதாக கூறினார். பொருளாதார சரிவினை தடுத்து நிறுத்த கடுமையான நிலைப்பாட்டிற்கு அவசியம் ஏற்பட்டதாக ட்ரூடோ கூறினார். இதனிடையே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகும் டிரக் ஓட்டுனர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

போராட்ட கனலில் கனடா அரசு எரிபொருள் ஊற்றி இருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஒட்டாவா நகரத்தில் போராட்டங்களை தடுத்து நிறுத்த போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றசாட்டை அடுத்து நகர காவல்துறை தலைவரான பீட்டர், பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவசர நிலை பிரகடனத்திற்கு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி, மறுபக்கம் போராட்டத்தை தொடரும் டிரக் ஓட்டுனர்கள் என பிரதமர் ட்ரூடோ-விற்கு நெருக்கடி தொடர்ந்து வருகிறது. பிரச்சனை பூதகமாக உருவெடுத்துள்ளதால் விரைவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE