மட்டக்களப்பு நகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருட்களுடன் இருவரை கைது செய்தபோது அதில் இளைஞர் ஒருவர் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உட்பட இருவரையும் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இந்திரன் வினோவா நேற்று (29) உத்தரவிட்டார்.
காவற்துறை மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான வெள்ளிக்கிழமை (28) காவற்துறையினர் இரவு நகர்பகுதியிலுள்ள பன்சாலை வீதியில் இளைஞர் ஒருவரையும் பயினியர் வீதியில் இளைஞர் ஒருவர் உட்பட இரு இளைஞர்களை 450 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தார்.
இதன்போது பன்சாலை வீதியில் வைத்து கைது செய்த இளைஞன் தனது வாயில் சொப்பின் பையில் கட்டிவைத்திருந்த ஐஸ் போதைப் பொருளை கடித்து விழுங்கியுள்ளான் இதனையடுத்து அந்த இளைஞனை மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 21, 23 வயதுடைய இளைஞர்களுக்கு எதிராக நீதிமன்றில் நேற்று காவற்துறையினர் வழக்கு தாக்குதல் செய்ததையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்தபோது பதில் நீதவான் இந்திரன் வினோவா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனை பார்வையிட்ட பின்னர் இருவரையும் 9 ம் திகதிவரை விளக்கமறியவில் வைக்குமாறு உத்தரவிட்டார்