அரிசி விலை தொடர்பில் ஆராயும் நோக்கில், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று(29) காலை புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனை சந்தைக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார்.
இதன்போது, மொத்த அரிசி விற்பனையாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், பச்சை அரிசி ஒரு கிலோகிராம் தற்போது 100 ரூபாவுக்கு மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டார்.
நாட்டரிசி ஒரு கிலோகிராம் 105 ரூபாவுக்கும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 118 ரூபாவுக்கும் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனை சில்லறை விலைக்கு விற்பனை செய்யும்போது, இரண்டு ரூபா 50 சதம் அல்லது மூன்று ரூபா போக்குவரத்து செலவு உள்ளது.
பை ஒன்றை வழங்கினால், மூன்று ரூபா அல்லது மூன்று ரூபா 50 சதம் என்ற அளவில் செலவுள்ளது.
எனவே, சில்லறை வர்த்தகத்தில் இலாபம் உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சதொசயில் நாட்டரிசி ஒரு கிலோகிராம் 105 ரூபாவுக்கும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 128 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று முதல் 10 கிலோகிராம் அரிசியை நுகர்வோருக்கு வழங்குவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டை வர்த்தகர்களின் பெருமளவான அரிசி கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன.
அவை விடுவிக்கப்பட்டால், மேலும் விலைகுறைப்பு செய்யலாம் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.