தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா தொற்றானது, கனடாவின் ஒட்டாவாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆபிரிக்க நாடான பொஸ்வானாவில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா மாறுபாடு தொடர்பில் தற்போது உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகள் முதற்கட்டமாக தங்கள் சர்வதேச எல்லைகளை மூடியுள்ளன. பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் நேரடி விமான சேவையை தடை செய்துள்ளன.
இந்த நிலையில், தெற்கு ஆபிரிக்காவில் உள்ள 8 நாடுகளின் பயணிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது. இதனிடையே, ஆபிரிக்க நாடான நைஜீரியாவுக்குப் பயணம் செய்து திரும்பிய ஒட்டாவாவைச் சேர்ந்த இருவர், கொரோனாவின் புதிய மாறுபாடான omicron தொற்றுக்கு இலக்கானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணிகள் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒன்ராறியோ சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், உலக நாடுகளில் பரவிவரும் புதிய கொரோனா மாறுபாடை எதிர்கொள்ள ஒன்ராறியோ நிர்வாகம் தயாராக உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.