முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 300 ஊழியர்களை ஊதியமற்ற கட்டாய விடுப்புக்கு அனுப்பியுள்ளது ஒட்டாவா மருத்துவமனை.
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 189 ஊழியர்களுக்கு ஒட்டாவா மருத்துவமனை கடிதம் மூலம் கட்டாய விடுப்பு தொடர்பில் தகவல் அளித்துள்ளது. அத்துடன் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு, இரண்டாவது டோஸ் தொடர்பில் தாமதம் காட்டும் 129 ஊழியர்களையும் கட்டாய விடுப்புக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒட்டாவா மருத்துவமனை விதித்திருந்த காலக்கெடு நவம்பர் 1ம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், குறிப்பிட்ட 318 ஊழியர்களும் தங்கள் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், எதிர்வரும் 31ம் திகதி நள்ளிரவு இவர்களின் அடையாள அட்டைகள் செயலிழக்கும் எனவும், அவர்களுக்கு அனுப்பியுள்ள மின் அஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி காலக்கெடு தொடர்பில் ஊழியர்களை நினைவூட்டவே குறித்த கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அவர்களை வேலையில் இருந்து நீக்க இருப்பதாகவோ அல்லது கட்டாய விடுப்புக்கு அனுப்புவதாகவோ இதற்கு பொருளில்லை என குறிப்பிட்டுள்ளார் ஒட்டாவா மருத்துவமனை செய்தித்தொடர்பாளர்.ஆனால், நவம்பர் 1ம் திகதிக்கு முன்னர் முழுமையாக தடுப்பூசி போடாத அனைத்து ஊழியர்களும் ஊதியமில்லாத கட்டாய விடுப்பில் வைக்கப்படுவார்கள் என்று ஒட்டாவா மருத்துவமனை கடந்த மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.