ஐ.பி.எல் (IPL) போட்டியைவிட, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுநாள் வரை வேறொரு அணிக்காக விளையாடிய வீரர்கள் அடுத்த ஆண்டு முதல் புதிய அணியில் விளையாட உள்ளனர்.
8 அணிகளும் வீரர்கள் ரீட்டெயின் நடைமுறை இப்போது முடித்துள்ள நிலையில், மற்ற அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்களை தங்கள் அணிக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
ரீட்டெயின் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்கள் ஏலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சில இளம் வீரர்கள் வியப்பளிக்கும் விதமாக ரீட்டெயின் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். மும்பையில் கலக்கிய பாண்டியா பிரதர்ஸ் தற்போது ஃபார்ம் அவுட்டில் தவிக்கின்றனர்.
அவர்கள் இருவரது பெயரும் ஏலத்தில் இருக்கிறது. அதில், ஹர்திக் பாண்டியாவை எடுக்க பல அணிகள் போட்டிப்போடலாம்.
அதேபோல், இஷான் கிஷன், ரஷித்கான், டேவிட் வார்னர், ஜானிபேரிஸ்டோ, பாப் டூபிளசிஸ், கே.எல் ராகுல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை ஏலம் எடுக்க அனைத்து அணிகளும் முட்டிமோதும் என்பதால், ஏலத்தில் அனல் பறக்கும் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
இதேபோல், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர்களுக்கும் இந்த ஏலத்தில் ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்பு ஏராளம்.
இதுஒருபுறம் இருக்க, எப்போது ஏலம் நடைபெறும்? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. கோடை காலத்தில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் என்பதால், அதற்கு முன்னதாக ஏலம் முடிவடைய வேண்டும்.
அதனால், அதிகபட்சமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏலம் நடைபெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
புதிதாக களமிறங்க உள்ள இரண்டு அணிகளும் ஏலத்தில் பங்கேற்க இருப்பதால், அடுத்த ஆண்டு ஐ.பி.எல் ஏலம், 20 ஓவர் சரவெடியை விட விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.