இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை இழிவுபடுத்தி எழுதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் சமூகவலைத்தளம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்ததற்கு முகமது ஷமியின் மோசமான பந்துவீச்சே காரணம் எனச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் அவரை இழிவுபடுத்தியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதின் மூலம் உலகக் கிண்ணம் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராகத் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது பாகிஸ்தான்.
இதுவரை டி20, ஒருநாள் உலகக் கிண்ணம் போட்டிகளில் இந்தியாவிடம் 13 முறை பாகிஸ்தான் அணி தோல்வி கண்டிருந்தது. இந்த முறையும் தோல்வி காணும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் அணித்தலைவர் பாபா்-ரிஸ்வான் இணையின் அதிரடி ஆட்டத்தால் வரலாற்றை மாற்றியது பாகிஸ்தான். இந்திய அணியின் மோசமான தோல்விக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியே முக்கியக் காரணம் எனச் சமூகவலைத்தளங்களில் அவரை இழிவுபடுத்தி பதிவுகள் குவிந்தன.
ஞாயிறன்று நடந்த ஆட்டத்தில் 3.5 ஓவர்கள் வீசி ஷமி 43 ஓட்டங்கள் கொடுத்தார். இந்தியப் பந்துவீச்சாளர்களில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்தவர் அவர்தான்.ஷமியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் நூற்றுக்கணக்கான பேர் அவரைத் துரோகியாகச் சித்தரித்து மத ரீதியிலான பதிவுகள் எழுதியுள்ளார்கள். இந்திய அணிக்குத் துரோகம் செய்ததால் அவரை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் எழுதி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்த நிலையில் பேஸ்புக் சமூக ஊடகத்தில் ஷமிக்கு எதிராகவும் அவரை இழிவுபடுத்தியும் எழுதப்பட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரரை இழிவுபடுத்தும் பதிவுகளை நீக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். எங்களுடைய விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் என்று பேஸ்புக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.