
இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காக சுவிற்சர்லாந்து அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினூடாக 500,000 சுவிஸ் ப்ரான்க் (CHF) இனை வழங்கியுள்ளது.
இந் நிதியைப் பயன்படுத்தி சிறுவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நிலவும் நோய்கள் மற்றும் இதர கோளாறுகளுக்கான சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகள் உள்ளடங்கலாக அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்யவுள்ளது.
மாணவர்களுக்கான சிற்றுணவுகள் போன்ற வேலைத்திட்டங்களினூடாக பின்தங்கிய பாடசாலைச் சிறுவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளைத் தடைகளின்றி தொடர்வதற்கும், ஆசிரியர்களுக்கான போக்குவரத்து ஊக்குவிப்புக் கொடுப்பனவு, ஏற்கனவே தவறவிட்ட கல்விச் செயற்பாடுகளை திரும்பப் பெறுவதற்கான வகுப்புக்களுக்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்கவும் இந் நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத் திறனாளிகள் உள்ளடங்கலாக சிறுவர்களுக்கெதிரான வன்முறை, புறக்கணிப்பு மற்றும் குடும்ப உறவுப் பிரிவினை என்பவற்றுடன் தொடர்புடைய வழக்குகளை நிர்வகிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் உதவுகின்றது.
மிகவும் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய 2.4 மில்லியன் சிறுவர்களுக்கு போசணை, சுகாதாரப் பராமரிப்பு, சுத்தமான குடிநீர், உளச் சுகாதார சேவைகள் மற்றும் தொடர்ந்தேர்ச்சியான கல்வி வாய்ப்புக்கள் போன்ற சேவைகளை வழங்குவதற்குத் தேவைப்படும் வளங்களை இலங்கைக்கு தந்து உதவுமாறு 2023 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது.