மத்தள பிரதேசத்தில் தமக்கு சொந்தமான காணியில் வாடகை அடிப்படையில் கஞ்சா பயிர் செய்கை செய்து வருவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தனது அரசியல் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிற்கு சொந்தமான காணியை வாடகை அடிப்படையில் பெற்று கஞ்சா கூடம் நடத்தி வந்த ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர், மத்தள பிரதேசத்தில் உரிய காணியை பிரதி சபாநாயகரிடம் இருந்து மரக்கறிகள் மற்றும் பழங்கள் பயிரிடுவதாகக் கூறி வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த காணியின் உரிமை குறித்து கதிர்காமம் பொலிஸாரிடம் நாம் வினவியதுடன், தொலைபேசிக்கு பதிலளித்த அதிகாரி, பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி வழக்கு ஒன்றிற்காக பொலிஸாரை விட்டுச் சென்றுள்ளதாகவும், அதனால் உரிய தகவல்களை வழங்க முடியாது எனவும் தெரிவித்தார்.