சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 12 இலட்சம் கிலோகிராம் சீனி (1200 மெற்றிக் தொன் சீனி) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.
தற்போது இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ள பிரவுன் சீனி, வர்த்தகர் ஒருவரால் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், கொள்கலனில் உள்ள வெள்ளைச் சீனிக்கு மத்தியில் பிரவுன் சீனி மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சீனி இருப்புக்களை கண்காணிப்பதில் அமைச்சர் கலந்துகொண்டதுடன், நாடு பாரிய டொலர் தட்டுப்பாட்டைச் சந்தித்துள்ள இவ்வேளையில் அனைவரும் சட்டத்திற்கு அமைவாக செயற்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.
ஒரு டொலர் கூட பாதுகாக்கப்பட வேண்டிய பாரிய அந்நியச் செலாவணிப் பிரச்சினையில் நாம் உள்ளோம் எனத் தெரிவித்த அமைச்சர், இவ்வாறானதொரு சூழ்நிலையில் வர்த்தகர்கள் அல்லது சாமானியர்கள் விதித்துள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாக செயற்படுவதே பொறுப்பாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு சட்டவிரோத சம்பவம் இடம்பெற்றால் இலங்கை சுங்கத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவிற்கு 24 மணிநேர தொலைபேசி இலக்கமான 0112-471471 மற்றும் 0112-347881 என்ற தொலைபேசி இலக்கத்தில் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
தகவல் வழங்கும் தரப்பினரை சுங்கத்துறை பாதுகாக்கும் எனவும் அவர்களுக்கான விசேட வெகுமதிகளை வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
சந்தையில் சுங்க அதிகாரி ஒருவர் பிரவுன் சீனியை கொள்வனவு செய்துள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.