ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சட்டமா அதிபரும் பிரசன்னமாகியிருந்ததுடன், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் 04 கருத்துக்களை முன்வைத்துள்ளமையினால் அவர்கள் முதலில் ஒரு கருத்துக்கு வருமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையினரின் ஏகோபித்த விருப்பத்துடன் செயற்படுவதாக அறிவித்துள்ள ஜனாதிபதி, ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என வலியுறுத்தியுள்ளார்.
தேவைப்பட்டால் சட்டமா அதிபரிடம் எழுத்துமூல விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
சுதந்திரமான மற்றும் அமைதியான தேர்தலுக்கான பின்னணி மற்றும் நிபந்தனைகள் குறித்து சட்டமா அதிபர் அவர்களுக்கு அறிவித்துள்ளார்.
சட்டச் சிக்கல் இருப்பின் நேரடியாக தன்னிடம் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் 04 கருத்துக்களை முன்வைத்ததன் காரணமாக நேற்றைய கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.