பல்வேறு காரணங்களால் நாளாந்தம் கணிசமான எண்ணிக்கையிலான ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்படுவதுடன், மக்களின் வசதிக்காக நாளாந்தம் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உதிரி பாகங்கள் இல்லாமை மற்றும் உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக கடந்த காலங்களில் தொழிநுட்பக் கோளாறுகளுக்கு உள்ளான பெருமளவிலான பஸ்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். தற்போது அந்த பேருந்துகள் பழுது நீக்கப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதனால் மக்களின் தேவைக்காக போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு, உரிய வழித்தடங்களில் அதிக பேருந்துகளை இயக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் பணத்தில் இந்தியாவிடமிருந்து உதிரி பாகங்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தொழில்நுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ள பேருந்துகளை எதிர்காலத்தில் விரைவாகச் சீர்செய்ய முடியும் எனவும் தலைவர் குறிப்பிட்டார்.