நாடளாவிய ரீதியில் நாளையும்(30) நாளை மறுதினமும்(31) டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 75,434 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இது இரு மடங்கை விட கூடுதலான அதிகரிப்பாகும்.
இதனிடையே, டெங்கு அபாய வலயங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம், பதுளை மற்றும் கேகாலை ஆகிய 09 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தமது சுற்றுச்சூழல் மற்றும் பொது இடங்களில் நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை அகற்றுவதன் மூலம் டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 02ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமையினால், பாடசாலை சூழலை சுத்தப்படுத்துவதற்காக அதிபர்களின் தலைமையில் வேலைத்திட்டமொன்றை உருவாக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.