புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கூட்டம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் பிஎப்.7 கொரோனா பரவி வரும் நிலையில், உயர்மட்ட ஆலோசனைக்குப் பிறகு பிரதமர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் குஜராத், ஒடிசா ஆகிய இரு மாநிலங்களில் பிஎஃப் 7 மற்றும் பிஎஃப் 12 என்ற இரண்டு திரிபு வகை கொரோனா இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. தடுப்பூசி போட்டவர்களுக்கும் இந்த வகை கொரோனா பரவும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதிய வகை கொரோனா தொற்றிலிருந்து காத்துக்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு பேசிய மோடி, கூட்டம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆக்சிஜன் கையிருப்பு, வென்டிலேட்டர் உள்ளிட்டவற்றின் இருப்பு பற்றி மாநிலங்கள் கண்காணிக்க அறிவுறுத்திய அவர், மருத்துவமனைகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.
முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.