அரசியல் தீர்வை காணும் நோக்குடன் தமிழ்க் கட்சிகள் உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வகட்சிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள பேச்சை வரவேற்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நான் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் தமிழ்க் கட்சிகளுடன் பேசி அரசியல் தீர்வை விரைந்து காணத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அது கைகூடவில்லை.
தமிழ்க் கட்சிகளும் என் மீது நம்பிக்கை வைக்கவில்லை. பழையதைப் பேசுவது இப்போது உகந்ததல்ல. அனைவரும் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்.
ரணில் விக்ரமசிங்க சிறந்த தலைவர். அதனால் தான் அவரை நான் பிரதமராக நியமித்தேன். ஜனாதிபதிப் பதவியிலிருந்து நான் விலகியவுடன் அவரை நாடாளுமன்றம் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யும் என்று நினைத்தேன்.
நான் நினைத்த மாதிரி அது நடந்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வகட்சிகளுடன் பேசி அரசியல் தீர்வைக் காண்பார் என்று நம்புகின்றேன். அது நடந்தால் நாட்டுக்கு நல்லது. மக்களுக்கும் நல்லது.
அதிகாரப் பகிர்வு விடயத்தில் கட்சிகள் முரண்பட்டு நிற்காமல் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். அவரின் கருத்து நியாயமான கருத்து. எனவே, கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.