பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி, புனர்வாழ்வு பணியகத்தை உருவாக்குவது ஜனநாயகம் அல்ல. அது மக்கள் எதிர்பார்ப்பும் அல்ல என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது நாளாக இடம்பெற்ற அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 22 திருத்தத்திற்கு ஆதரவளிக்க எமது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அவ்வாறு நாம் அதனை ஆதரிப்பதால் இந்த திருத்தம் மக்கள் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக கொண்டுவரப்படுகிறது என்று நாங்கள் கூறப்போவதில்லை.
தொடர்ச்சியாக எமது அரசியலமைப்புகள் கேலிக்குரியவையாகியுள்ளன. அவைகள் வர்ணம் பூசப்பட்டதாகவே தொடர்ந்து திருத்தப்பட்டு வந்துள்ளன.
அந்த வகையில் 18 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒருவர் இரண்டு முறை ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதற்காக தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக கொண்டுவரப்பட்டது.
அதேபோன்று பாராளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டையே இருபதிலும் கொண்டிருந்தனர்.
அந்த வகையில் ஒன்றுக்கொன்று அவை முரண்பாடானவை. இதனால் எமது பாராளுமன்றத்தின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை தொடர்பில் நாம் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை.
காலத்துக்குக் காலம் அரசியல் கட்சிகள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்கின்றன.ஆனால் அவை மக்கள் எதிர்பார்ப்பல்ல.
எனவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி, புனர்வாழ்வு பணியகத்தை உருவாக்குவது ஜனநாயகம் அல்ல.
அது மக்கள் எதிர்பார்ப்பும் அல்ல. அதனால் தூரதரிசனத்துடன் மக்கள் எதிர்பார்க்கும் பாராளுமன்றத்தை உருவாக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது, அத்துடன் 22 ஆவது அரசியலமைப்பை நாம் ஆதரிப்பதன் மூலம் அதனை மக்கள் எதிர்பார்ப்பு என கூற முடியாது என்றார்.