உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தொடர்ந்து மர்மமாக உள்ள, நீர்கொழும்பு – கட்டுவபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய மொஹம்மது ஹஸ்தூன் எனும் குண்டுதாரியின் மனைவியான புலஸ்தினி மகேந்ரன் எனும் சாராவுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் வெளிப்படுத்த 3 ஆவது தடவையாகவும் மீண்டும் டி.என்.ஏ. பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அது குறித்த பகுப்பாய்வுகள் நிறைவடைந்துள்ளன. இந் நிலையில் குறித்த மூன்றாவது டி.என்.ஏ. பகுப்பாய்வு அறிக்கை விசாரணையாளர்களான சி.ஐ.டி.யினருக்கும், கல்முனை நீதிமன்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது -வெலிவேரியன் பகுதியில் வீடொன்றில் குண்டினை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படும், சஹ்ரானின் சகோதரர் ரில்வான் தலைமையிலான குழுவினருடைய உடற் பாகங்கள், அம்பாறை பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், அவை கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி மீள தோண்டி எடுக்கப்பட்டன.
கல்முனை நீதிவானிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவுக்கு அமைய இவ்வாறு உடற்பாகங்கள், அம்பாறை நீதிவான் துஷாரா குமாரி தர்மகீர்த்தி முன்னிலையில் இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்டன.
இதற்கு முன்னர் குறித்த உடற்பாகங்கள் தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுத்த சட்ட வைத்திய அதிகாரிகள், இவ்விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுத்த அனைத்து பொலிஸ் அதிகாரிகளுடன் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகளும் இந் நடவடிக்கையின் போது பங்கேற்றிருந்தனர்.
பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்ட இந் நடவடிக்கையின் போது, அம்பாறை மாநகர சபையின் பெக்கோ இயந்திரம் கொண்டு புதைக்கப்பட்ட இடம் மீள தோண்டப்பட்ட நிலையில், அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளின் வழி நடாத்தலில் உடற் பாகங்கள், கறுப்பு நிற பாதுகாப்பு பைகளுடன் எடுக்கப்பட்டது. பின்னர் சட்ட வைத்திய அதிகாரிகள் தேவையான மாதிரிகளைப் பெற்றுக்கொண்டனர். இந் நடவடிக்கைகள் அனைத்தும் பொலிஸ் ஸ்தல தடயவியல் பிரிவினரின் பங்கேற்புடன் இடம்பெற்றன. இந் நிலையிலேயே இந்த உடற் பாகங்கள் மூன்றாவது டி.என்.ஏ. பரிசோதனைகளை முன்னெடுப்பதற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கலத்தில் முன்னெடுக்கப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனைகள் நிறைவடைந்து அதன் பெறுபேறு அடங்கிய பகுப்பாய்வு அறிக்கை, நீதிமன்றுக்கும், விசாரணையாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.
கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருது -வெலிவேரியன் பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படைகளுடனான மோதலினிடையே குண்டினை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு மொத்தமாக 19 பேர் இருந்ததாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. எனினும் சஹ்ரானின் மனைவியும் அவரது ஒரு குழந்தையும் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும் முன்னெடுக்கப்பட்ட ஸ்தல பரிசோதனைகளின் போது அடையாளம் காணப்பட்ட உடற்பாகங்கள் மீது முன்னெடுக்கப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனைகளின் போது, 16 சடலங்களே அடையாளம் காணப்பட்டிருந்தன. இந் நிலையிலேயே அங்கிருந்த சாரா எனும் பயங்கரவாதி தப்பித்துள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பிலான விசாரணைகளிலேயே சாரா தொடர்பில் முதலில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. குறிப்பாக கட்டுவாபிட்டிய தேவாலய குண்டுவெடிப்பு சம்பவத்தின் குண்டுதாரியின் மனைவி என அடையாளம் காணப்பட்ட சாரா, அந்த குண்டுதாரியை காதலித்து மதம் மாறி திருமணம் செய்திருந்தார்.
சட்டத் தேவைக்காக சாய்ந்தமருது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த பயங்கரவாத கும்பலைச்சேர்ந்தவர்களின் ஆள் அடையாளத்தை நிரூபிக்க, சஹ்ரானின் மனைவி ஹாதியாவின் வாக்கு மூலத்தினை அடிப்படையாக கொண்டு டி.என்.ஏ. பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதாவது, சம்பவ இடத்திலிருந்து ஸ்தல தடயவியல் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்ட உயிரியல் கூறுகள், குண்டு வெடிக்கச் செய்யும் போது வீட்டில் இருந்தவர்கள் என சஹ்ரானின் மனைவி ஹாதியாவின் வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டவர்களின் இரத்த உறவுகளிடம் பெறப்பட்ட உயிரியல் கூறுகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டன.
இதன்போது ஹாதியாவின் வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைவரினதும் டி.என்.ஏ.க்கள் கண்டறியப்பட்டு அவர்களது இறப்பு அறிவியல் ரீதியில் உறுதி செய்யப்பட்ட போதும், ஹாதியா பெயர் குறிப்பிட்ட சாரா தொடர்பில் மட்டும் டி.என்.ஏ. பரிசோதனைகள் தோல்வியடைந்தன. (ஹாதியாவின் வாக்கு மூலத்தை தவிர வேறு சுயாதீனமான சாட்சிகள் ஊடாகவும் அவ்வீட்டில் இருந்தவர்கள் யார் என்பதை விசாரணையாளர்கள் கண்டறிந்திருந்தனர்)
இதனையடுத்து அது குறித்து விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. சாராவின் தாயின் டி.என்.ஏ. மாதிகளை பெற்றே, சம்பவ இடத்திலிருந்த உயிரியல் கூறுகளுடன் அது ஒப்பீடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் சாய்ந்தமருது வீட்டில் குண்டு வெடிக்கச் செய்யும் போது சாரா அங்கிருந்ததாக சஹ்ரானின் மனைவி ஹாதியாவின் கண்கண்ட சாட்சியும், சாரா சாய்ந்தமருது வீட்டுக்கு சென்றமைக்கான அறிவியல் தடயங்களும் இருக்கும் நிலையில், குண்டு வெடிப்பின் பின்னர் அவருக்கு என்ன ஆனது என்ற தெளிவான விம்பம் இதுவரை விசாரணையாளர்களிடம் இல்லை.
இவ்வாறான நிலையிலேயே ஏற்கனவே இரு முறை செய்யப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனைகளுக்கு மேலதிகமாக மீளவும் டி.என்.ஏ. பரிசோதனைகளுக்கான நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு உடற் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, இரசாயன பகுப்பாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.