மியான்மரின் முக்கிய சிறையில், நேற்று குண்டுகள் வெடித்து, எட்டு பேர் பலியாகினர்; 18 பேர் பலத்த காயமடைந்தனர்.
தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. இங்கு நடந்த தேர்தலில், ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், கடந்த ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல், அந்நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், யாங்கோன் நகரில் உள்ள ‘இன்செய்ன்’ என்ற சிறையில் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இச்சிறையில் கைதிகளுக்கு, அவர்களது உறவினர்கள் கொண்டுவரும் பார்சல்களை வாங்கும் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்துக்கு உள்ளேயும், வெளியேயும், நேற்று காலை நடந்த இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்களில், 10 வயது சிறுமி உட்பட பார்வையாளர்கள் ஐந்து பேர், சிறைச்சாலை ஊழியர்கள் மூன்று பேர் என, மொத்தம் எட்டு பேர் கொல்லப்பட்டனர்; பார்வையாளர்கள், ஐந்து சிறைச்சாலை ஊழியர்கள் என 18 பேர் காயமடைந்தனர்.அரசுக்கு எதிராக செயல்படும் ஒரு சிறிய குழு, இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.