யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள் 2011ல் மாயமான வழக்கில், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேரில் ஆஜராக, ‘நோட்டீஸ்’ அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமான போர் 2009ல் முடிவுக்கு வந்தபோது, அந்தநாட்டு அதிபராக மகிந்த ராஜபக்சே பதவியில் இருந்தார். அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே ராணுவச் செயலராக இருந்தார்.
இலங்கை போர் முடிவுக்கு வந்த பின், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் அடுத்தடுத்து மாயமாகினர்; அவர்கள் மீண்டும் திரும்பி வரவே இல்லை.
மனித உரிமை ஆர்வலர்கள் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011ல் மாயமாகினர். ராணுவம் வாயிலாக கோத்தபய ராஜபக்சே அவர்களை கடத்தி கொலை செய்துவிட்டதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக கோத்தபயவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி யாழ்ப்பாணம் நீதிமன்றம் 2018ல் உத்தரவிட்டது. யாழ்ப்பாணத்தில் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய கோத்தபய நேரில் ஆஜராவதை தவிர்த்து வந்தார்.
இதன் பின், 2018ல் அவர் இலங்கை அதிபரானார்.இதையடுத்து, அவரை நீதிமன்றத்துக்கு அழைத்து விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது அவர் பதவி இழந்துவிட்டதை அடுத்து, இந்த வழக்கு தொடர்பாக, டிச., 15ல் நேரில் ஆஜராக ‘நோட்டீஸ்’ அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் நேற்று, உத்தரவிட்டது.