பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகினார். கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக முடியும். இதன்படி கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார். நடப்பு பட்ஜெட்டில் பல்வேறு வரிச் சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் பொருளாதார ஆலோசனை சரியாக வழங்காத நிதி அமைச்சர் கவாசி கவார்தெங்கை நீக்கினார். புதிய நிதி அமைச்சர் ஜெர்மி ஹன்ட்டை நியமித்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று லிஸ்டிரஸ் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த சுயெல்லா பிரேவர்மேன் என்பவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய வம்சாவளி பெண்ணான இவரது தந்தை கோவாவை சேர்ந்தவர். தாயார் தமிழகத்தை சேர்ந்தவர்.இவர் பதவி ஏற்று 43 நாட்களே ஆன நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் உடன் நடந்த சந்திப்புக்கு பின் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.