ஐ . நா மனித உரிமை பிரதிநிதிக்கு மனோ கணேசன் கடிதம்

பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமை தொழிலாளர்களாகவும், தமிழ் சிறுபான்மை இனத்தவராகவும் இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள். இது தொடர்பில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள். ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபோகாடாவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டால், அடுத்த ஐநா மனித உரிமை ஆணைகுழு கூட்டத்தில் இவ்விவகாரம் எடுத்தாளப்பட உரிய அவகாசம் கிடைக்கும் என கொழும்பு ஐநா அலுவலக வளாகத்தில் இருந்து செயற்படும், ஐநா மனித உரிமையாளரின் பிரதிநிதி, சிரேஷ்ட மனித உரிமை ஆலோசகர் ஜுஹன் பெர்னாண்டசுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அனுப்பியுள்ள அவசர மின்னஞ்சலில் கோரியுள்ளார்.

மனோ கணேசன் எம்பியின் மின்னஞ்சலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

நவீன அடிமைத்தனங்கள், அதன் மூல காரணங்கள் மற்றும் தொடர் விளைவுகள் ஆகிய விவகாரங்களுக்கான, ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின், விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபோகாடா ஐநா மனித உரிமை ஆணைகுழுவின் கடைசி கூட்டத்துக்கு சமர்பித்த அறிக்கையின்படி பின்வரும் பாரதூரமான நிலைமைகள் பெருந்தோட்ட சமூகத்தின் மத்தியில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மனிதர் வாழ தகைமையற்ற வாழ்விடங்கள், அரைகுறை சுகாதார நிலைமைகள், போஷாக்கின்மை, வறுமை, பெண்கள் மீதான அதீத சுமை, சிறுவர் தொழிலாளர், வேலைத்தள விபத்துகளுக்கு முறையான நஷ்ட ஈடின்மை, முறையற்ற வேலை நிலைமைமைகள், அதிக நேர வேலை குறை வேதனம், நவீன அடிமைத்தன வடிவங்கள், அதி சுரண்டல் பாரபட்சம், உடல்ரீதியான, பேச்சுரீதியான பாலியல்ரீதியான துன்புறுத்தல், வீட்டு வேலை, பாலியல் வேலை, கொத்தடிமை வேலை, தனியார் நிறுவன தோட்டங்களில், அரச நிறுவன தோட்டங்களில், சிறு உடைமையாளர் தோட்டங்களில் நியாயமற்ற நாட்கூலி முறைமை, தரமான கல்வி பெற வாய்ப்பின்மை, மொழி பிரச்சினை, அதிக தொகை பாடசாலை விடுகை, உள்ளூர் தேசிய தொழில் சட்ட கண்காணிப்பு இன்மை, துணைக்கு வரும் சிவில் அமைப்புகள் மீதான கண்காணிப்பு தொல்லை.

பெருந்தோட்ட சமூகம், இலங்கையில் வாழும் மலையக தமிழரில் ஒரு அங்கம். ஆகவே பெருந்தோட்ட சமூகத்தின் மீதான ஒடுக்கு முறைக்கு அவர்கள் சிறுபான்மை தமிழராக இருப்பதும் ஒரு காரணமாகும். அடுத்தது அவர்கள் மீதான நவீன கூலித்தொழில் அடிமைத்தனமாகும்.

இந்நிலையில் அரசியல் தலைமைகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், அரசு தரப்பு, தோட்ட நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுடன் பெருந்தோட்ட துறையில் நிகழும் நவீன கூலியடிமை, இன அடிமைத்தனம் ஆகியவை தொடர்பில் கலந்துரையாடும்படி கோருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE