தற்போது நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் தமக்குக் கிடைத்துள்ள சலுகைகள் தொடர்பில் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய ஞாயிறு சண்டே டைம்ஸ் இவ்விடயத்தை தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சுப் பதவிகளை தராவிட்டால் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் அச்சுறுத்தியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 39 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அமைச்சர்களின் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் புதிதாக பதவியேற்றுள்ள இராஜாங்க அமைச்சர்கள், தமக்கு செயலாளர்கள் தேவை என கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி அவர்களின் அமைச்சுக்குரிய விடயதானங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படாமல் இருப்பது குறித்தும் இராஜாங்க அமைச்சர்கள் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் ஏறக்குறைய பஷில் ராஜபக்சவின் வற்புறுத்தலின் பேரிலேயே இடம்பெற்றுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்ற பலர், தமக்குக் கிடைத்த இராஜாங்க அமைச்சர் பதவிகளுக்காக பஷில் ராஜபக்ஷவுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்திருந்தனர்.
அமைச்சரவை அமைச்சர்களுக்கு இராஜாங்க அமைச்சர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என ஜனாதிபதி எதிர்பார்க்கிறார். ஆனால், இராஜாங்க அமைச்சர்கள் கோரும் வகையில் செயலாளர்களை நியமிக்கவோ அல்லது விடயதானங்களை வர்த்தமானியில் வெளியிடவோ ஜனாதிபதி தயாராக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.