பாகிஸ்தானில் வெள்ளத்தால் 1.6 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 30 லட்சம் குழந்தைகள் உயிர் காக்கும் அவசர உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர்’ என, ‘யுனிசெப்’ தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாதம் முதல் கன மழை பெய்து வருகிறது. நாடு முழுதும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இதுவரை 3.5 கோடி பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.இந்நிலையில், யுனிசெப் எனப்படும் ஐ.நா., சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்தின் பிரதிநிதி அப்துல்லா பாடில், பாக்.,கின் சிந்து மாகாணத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சமீபத்தில் பார்வையிட்டார்.
பின், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 1.6 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30 லட்சம் பேருக்கு உடனடி உயிர் காக்கும் அவசர உதவி தேவைப்படுகிறது. ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய்களுடன் போராடி வருகின்றனர். கிராமங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதுவரை 1,545 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.