கடந்த வாரம் இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்தது.
அன்றைய தினம் துபாயில் இடம்பெற்ற 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது.
நாடு நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த இரண்டு வெற்றிகளும் இலங்கை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தின.
அதன்படி, இரண்டு அணிகளும் நாடு திரும்பியபோது மகத்தான வரவேற்பு கிடைத்து.
எனினும், வலைப்பந்தாட்ட அணி இலங்கை திரும்பிய போது அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கை வகித்திருந்த தர்ஜினி சிவலிங்கம் வீராங்கனைகள் மத்தியில் இல்லாமை பலரையும் கேள்விக்குள்ளாக்கியது.
இந்நிலையில, தர்ஜினி சிவலிங்கம் நாடு திரும்பாமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
தர்ஜினி சிவலிங்கம் தற்போது அவுஸ்திரேலியாவில் பிராந்திய அணியொன்றில் விளையாடி வருகிறார்.
இதற்கிடையில், ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரில் தர்ஜினி சிவலிங்கம் பற்கேற்பதற்காக அவரை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு வலைப்பந்தாட்ட பயிற்றுநர் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், அவரின்(தர்ஜினி சிவலிங்கத்தின்) உடல் அமைப்பை கருத்தில் கொண்டு விசேட வாகனத்தை ஏற்பாடு செய்வதற்காக 50 ஆயிரம் ரூபாவை அவர் கோரியிருந்தார்.
எனினும், விளையாட்டுத்துறை அமைச்சு அதற்கு மறுப்பு தெரிவித்தது.
இதனையடுத்து, ஆசியக்கிண்ண போட்டிக்கு சிங்கப்பூர் சென்ற அணி இலங்கையில் பயிற்சிகளை பெற்ற போது தர்ஜினி அவுஸ்திரேலியாவில் பயிற்சிகளில் ஈடுபட்டார்.
அத்துடன், சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசியக்கிண்ணத்துக்காக அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து அங்கு சென்றிருந்தார்.
மேலும், போட்டிகள் முடிவடைந்த பின்னர் தர்ஜினி சிவலிங்கம் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கே திரும்பி சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.