அம்பேவெல , மில்கோ தொழிற்சாலைக்காக கொள்வனவு செய்யப்பட்ட 45,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருளை தனியார் நிரப்பு நிலையங்களுக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் அம்பேவெல மில்கோ தொழிற்சாலையின் ஊழியர்கள் குழு தொடர்பில் மில்கோ (பிரைவேட்) லிமிடெட் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அம்பேவெல மில்கோ தொழிற்சாலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருளை 2021 ஆம் ஆண்டிலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விற்பனை செய்யும் பணியாளர்கள் குழுவைப் பற்றி தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மில்கோ தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, சம்பந்தப்பட்ட ஊழியர்களை கட்டாய விடுமுறையில் அனுப்ப தேவையான நடவடிக்கை எடுப்போம் என ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் தொழிற்சாலையில் உள்ள ஜெனரேட்டர்களை இயக்குவதற்காக வாங்கப்பட்ட 45,000 லீற்றர் எரிபொருளை குறிப்பாக டீசல் விற்பனை செய்துள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னரே இவ்வாறு எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“இந்தச் சம்பவம் தொடர்பாக நான் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்திருந்தேன், இந்த வருடமும் இது நடந்ததா என்பதைக் கண்டறிய விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறு அவர் எனக்கு அறிவுறுத்தினார். அதன்படி, வரும் நாட்களில் இது குறித்து பொலிஸில் புகார் அளிக்க உள்ளேன். மேலும், பவுசர்களில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் (CPC) விசாரணை நடத்தும்” என மில்கோ தலைவர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.