பேக்கரி தொழில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் கோதுமை மாவின் விலையில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை, இதனால் பேக்கரி தொழிலை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பேக்கரி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது வாகனங்களில் பேக்கரி உணவு பொருட்களை கொண்டு சென்று விற்பனையில் ஈடுபடுவோர் வெகுவாக குறைந்துள்ளனர்.
பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களின் கோதுமை மா பேக்கரிகளின் தேவையில் 25 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறன.
தற்போது சிறிய அளவிலான பேக்கரிகள் பெருமளவு மூடப்பட்டுள்ளதாகவும், இத்தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் வெளிநாடுகளில் வேலைக்காக விண்ணப்பித்து வருவதாகவும், சிலர் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.
துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து தனியார் வர்த்தகர்கள் கோதுமை மாவை இறக்குமதி செய்தால் கோதுமை மாவின் விலையில் எவ்வித குறைப்பும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.