ரணிலை துரத்த முயற்சித்தால் யார் நாட்டை ஆட்சி செய்வது?

“அரச நிறுவனங்களில் பல நஷ்டம் ஏற்படுகின்ற நிலையில் இன்று இருக்கிறன. அதற்காக சில அரச நிறுவனங்கள் மூடப்படும் நிலைமைக்கு வந்துள்ளது. இந்த நிறுவனங்கள் மூடப்பட்டால் பெரியதொரு தொகையினருக்கு தொழில் இல்லாமல் போகும்” என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் எப்பொழுதும் நிறுவனத்தைப் பாதுகாத்துக் கொண்டு தமது உரிமைகளை வெல்லுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

அதே போன்று திறைசேரியில் தங்கியிருக்காமல் வருமானம் ஈட்டுகின்ற முறை ஒன்றையும் நாங்கள் யோசிக்க வேண்டும். தற்போது நாடு பெரியதொரு பொருளாதாரப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. டொலர் தட்டுப்பாடு இருப்பதால் தொடர்ந்தும் திறைசேரியில் தங்கி இருக்க எங்களால் முடியாது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் பாரிய கடன் பெறப்பட்டு அந்தக் கடனை நாங்கள் தான் செலுத்த வேண்டி வந்தது. அது போல கொரோனா சிக்கல் எங்களுடைய பொருளாதாரத்திற்கு பாரிய அழுத்தத்தை தந்தது. இந்தப் பொருளாதாரப் பிரச்சினை இவ்வளவு கடுமையாகுவதற்கு அதுவும் ஒரு காரணம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்தப் பிரச்சினையை தூரத்தில் இருக்கும் போதே கண்டார். அதனால் தான் இறக்குமதியைக் கட்டுப்படுத்தினார். எனினும் மற்றவர்கள் செய்த தவறுகளைச் சுமக்க வேண்டி வந்ததால் அவர் பதவியைக் கைவிட்டு வெளியேற வேண்டி வந்தது.

கோட்டா கோ ஹோம் சொன்ன அவர்கள் இப்பொழுது ரணில் கோ ஹோம் என்று சொல்கின்றார்கள். வருகின்ற வருகின்ற எல்லா ஜனாதிபதிகளையும் துரத்த முயற்சித்தால் யார் நாட்டை ஆட்சி செய்வது.

எப்படியாவது பொறுத்துக் கொண்டு இந்தப் பயணத்தில் சென்றால் இன்னும் ஒன்றரை வருடத்தில் மின்சக்திப் பிரச்சினை, எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

தமது தொழிற்சங்க உரிமைகளை மட்டும் பேசிக் கொண்டிருப்பதற்கு முன்னர் நாடு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எங்களால் நிலைத்து நிற்க முடியாது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE