
ஏழை மக்களின் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை வழங்கி, வரித் திருத்தங்களுடன் கூடிய, மக்களை அபிவிருத்தி செய்யும் வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைப்பார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில், காலியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
வீதிகள், கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான பட்ஜெட்டாக அல்லாமல், உணவு, உடை இன்றி இருக்கும் ஏழை மக்களுக்கு உணவு உடை வழங்கக் கூடிய பட்ஜெட்டாக இது அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தலைமுறை பிறப்பதாகவும் அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, வரித் திருத்தங்களோடு கூடிய மக்களை அபிவிருத்தி செய்யும் வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி முன்வைப்பார் என்றும் தெரிவித்தார்.
இதனால் அவதிப்படும் குழந்தைகளின் பசி போக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் கடந்த அரசாங்கம் செய்த தவறுகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
எவருக்கும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆவதற்கான கனவுகள் இருக்கலாம் என்று தெரிவித்த அவர், 2 மில்லியன் மக்களை வாழ வைக்கும் திட்டமும் அவர்களிடம் இருக்க வேண்டும் என்றார்.