தற்போது தாய்லாந்தில் அடைக்கலம் தேடியுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைக்கு வந்ததன் பின்னர் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் எனில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என சிறிலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.
அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் பிரதீப் உடுகொட ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்ததாகவும், அவரை பிரதமராக நியமிக்க விரும்பாதவர்கள் யாரும் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 09 ஆம் திகதி ஏறபட்ட பாரிய மக்கள் புரட்சியை அடுத்து நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் அடைக்கலம் தேடினார். எனினும் அங்கு ஏற்பட்ட எதிர்ப்பை அடுத்து சிங்கப்பூருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தாய்லாந்து சென்ற அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டின் அடிப்படையில் 90 நாட்கள் தங்க கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது தாய்லாந்து அரசு.
தற்போதுவரை தாய்லாந்தில் தங்கியுள்ள கோட்டாபய நாடு திரும்பவுள்ளதாக மொட்டு கட்சியை சேர்ந்த பலரும் தெரிவித்து வருகின்ற போதிலும் அவர் எப்போது திரும்புவார் என்பது தொடர்பாக உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.